சாலை பணிக்காக ஒதுக்கிய ரூ.2.5 கோடியை திருப்பி அனுப்பினால் போராட்டம்-கிராம மக்கள் எச்சரிக்கை

கூடலூர் :  கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக்கல்லாடி முதல் மாங்குன்னு வரையிலான சாலை அமைக்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பினால் தேவர்சோலை பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்போவதாக  அப்பகுதி மக்கள் எச்சரிக்கை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் பாஜ மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன் கூறியதாவது: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக்கல்லாடி  பகுதியிலிருந்து பன்னிமூலா வழியாக மாங்குன்னு வரையிலான சுமார் 1500 மீட்டர் தூர புதிய சாலையை செப்பனிட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த 2018ல் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 விவசாயிகள், மவுண்டாடன் செட்டி பழங்குடியின மக்கள், பனியரின ஆதிவாசி மக்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துவதற்காக  கிராம மக்களால் அமைக்கப்பட்ட இந்த மண் சாலையை தேவர்சோலை பேரூராட்சி சார்பில் செப்பனிட்டு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை அளிக்கப்பட்டது. சாலை அமைத்து தருவதாக  மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் அப்போது நிதி இல்லை என்ற காரணத்தை கூறி 2020 ஆம் ஆண்டு வரை சாலை அமைக்கப்பட வில்லை.

 இதனையடுத்து இப்பகுதி மக்கள் சார்பில் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சாலை அமைத்து தரக் கோரி மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு பணம் இரண்டரை கோடி ரூபாய் நபார்டு திட்டத்தின் மூலம் அனுப்பப்பட்டு சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பணிகளுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேவர்சோலை பேரூராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது.

ஆனால் இதுநாள் வரையிலும் இப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்து இப் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்ட போது, இந்த சாலை பணி சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அது முடிந்ததும் உடனடியாக பணி மேற்கொள்ளப்படும் என்றும் சமாதானப் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சாலை பணியை மேற்கொள்ளாமல் பணிக்கான நிதியை திரும்ப அரசுக்கே ஒப்படைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 சாலை வசதி இல்லாமல் இருந்த இப்பகுதி மக்களிடமிருந்து தானமாகவும் பணம் கொடுத்தும் நிலம் வாங்கி மண் சாலை அமைத்து அந்த சாலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. சாலை அமைப்பதற்கு நிதி பெறுவதற்காக கிராம மக்கள் சார்பிலேயே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சாலை பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அரசிடம் வழங்கும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின்  நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது.

இப்பகுதிகளில் பூர்வீகமாக வசிக்கும் ஆதிவாசி இன மக்கள்,  ஆதிவாசி இன செட்டி சமுதாயத்தினர் மற்றும் இதர சமுதாயத்தை சேர்ந்த மக்களும் அன்றாடம் பயன்படுத்த சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், பல்வேறு முயற்சிகளுக்குப் பின் ஒதுக்கப்பட்ட நிதியில்  டெண்டர் விடப்பட்ட நிலையில் சாலை அமைக்காமல்  திருப்பி அனுப்புவதை ஒப்புக்கொள்ள முடியாது.

 இப்பணிக்காக ஏற்கனவே ஒருமுறை டெண்டர் விடப்பட்டு அதனை நிராகரித்து மீண்டும் டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒப்பந்தம்  கோரப்பட்ட படி புதிய சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை எந்தக் காரணத்தைக் கொண்டும் திரும்ப அரசுக்கு ஒப்படைக்கக் கூடாது.

உடனடியாக சாலைப் பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தேவர்சோலை பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தவும், சட்டரீதியாக வழக்கு தொடரவும்  நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>