மின்மாற்றியில் மலர்ந்த செடி, கொடிகளால் விபத்து அபாயம்-பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம் :  விழுப்புரம் அருகே சேர்ந்தனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை முறையாக பராமரிக்காததால் செடி கொடிகள் படர்ந்து முழுவதுமாக மின்மாற்றியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் துண்டிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பொதுமக்களும், ஊழியர்களும் செல்ல முடியாத நிலை உள்ளன. மேலும் மழைக்காலத்தின்போது மின்னழுத்தம் மற்றும் குறைந்த, உயர்மின் அழுத்தத்தின்போது பீஸ் போகின்றன.

பீஸ்போடும்போது மின்மாற்றியில் செடி கொடிகள் மூலமாக மின்சாரம் பாய்ந்து மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் விவசாய நிலம் அருகே மின்மாற்றி உள்ளதால், ஷாக் அடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அலுவலர்களிடம் முறையிட்டபோதும் இதுவரை சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.

தற்போது சாதாரண மின்வாரிய தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, இந்த மின்மாற்றி மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பினை உடனடியாக சரி செய்து மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் உடனடியாக மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள செடி கொடிகளை அகற்றி முறையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: