கிருஷ்ணகிரியில் பராமரிப்பின்றி காட்சி பொருளாக மாறிய நம்ம ஊரு டாய்லெட் திட்டம்-பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், நம்ம ஊரு டாய்லெட் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும், மூன்று மாநில எல்லையில் உள்ள நகரமாகவும் உள்ளது. இங்கு அண்டைய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஆந்திரா மாநிலம் குப்பத்தில் இருந்து, வணிக நோக்கத்திற்காக கிருஷ்ணகிரி பழையபேட்டை, புதுப்பேட்டை பகுதிக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். அத்துடன் நகரை சுற்றியுள்ள விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய காலை 4, 5 மணிக்கே கிருஷ்ணகிரி நகரத்திற்கு வருகின்றனர். இவர்கள் தங்கள் காலை கடனை கழிக்க முடியாமல், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு, கடந்த அன்றைய ஆட்சியாளர்களால் ‘நம்ம ஊரு டாய்லெட்’ என்ற திட்டம், நகராட்சி நிர்வாக ஆணையத்தின் நேரடிப் பார்வையில் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி நகராட்சியில் பழையபேட்டை மீன் மார்க்கெட், புதுப்பேட்டையில் 5 ரோடு அருகில் என 2 இடங்களில் சுமார் ₹8 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் கட்டப்பட்டது. சிறிது நாள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த இந்த டாய்லெட்டுகள், பின்னர் உரிய பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த டாய்லெட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் புதுப்பித்து, பயன்பாட்டிற்கு விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: