காவேரிப்பட்டணத்தில் நேற்றிரவு நூல் மில்லில் பயங்கர தீ விபத்து-₹5 லட்சம் பஞ்சு நாசம்

காவேரிப்பட்டணம் : காவேரிப்பட்டணத்தில் உள்ள நூல் மில்லில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ₹5 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பிடிஓ அலுவலகம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இதனை எர்ரஅள்ளியைச் சேர்ந்த தர்மன்(44) என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு, பஞ்சுகளை மொத்தமாக வாங்கி, அதனை நூலாக திரித்து கையுறை உள்ளிட்டவற்றை தயாரித்து வந்தனர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் ₹5 லட்சத்திற்கு பருத்தி பஞ்சு வாங்கி இருப்பு வைத்திருந்தனர். நேற்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால், தர்மன் மட்டும் மில்லில் இருந்து அலுவலக பணிகளை கவனித்துள்ளார். இரவு 8 மணியளவில் மில்லை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

இரவு 9 மணியளவில அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள், நூல் மில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதனால், திடுக்கிட்ட தர்மன் காவேரிப்பட்டணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொளுந்து விட்டு எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இதில் மில்லில் இருந்த ₹5 லட்சம் மதிப்பிலான நூல் பேல்கள் எரிந்து நாசமானது. தர்மன், மின்விளக்குகளை அணைத்து விட்டு சென்றதால், மின்கசிவால் தீப்பிடித்திருக்க வாய்ப்பில்லை. அருகிலேயே மயானம் உள்ளதால், இரவு நேரத்தில் அங்கு வந்து மது அருந்திய யாராவது, புகை பிடித்து விட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசி சென்றதில் நூல் மில்லில் தீப்பிடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: