செங்கல் சூளை விறகுக்காக சாத்தான்குளம் பகுதிகளில் பனை மரங்கள் வெட்டி கடத்தல்-சமூக ஆர்வலர்கள் புகார்

சாத்தான்குளம் :  சாத்தான்குளம் பகுதியில் பனைமரங்கள் வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகுக்கு பயன்படுத்திட கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கற்பக விருட்சமான பனை மரத்தின் நுனி ஓலை முதல் அடி வரை பயன் தரக்கூடியது. சிறப்புமிக்க பனைமரத்தை வெட்ட தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இடையூறான மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டரிடம்  அனுமதி பெற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பனை மரங்களை பாதுகாக்கவும் பனை தொழிலை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா பழங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சடையன்கிணற்றில் இருந்து கல்விளை செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை இதே பகுதியில் 60க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். இதையறிந்த தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கென்னடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் அங்கு சென்ற நிலையில், பனை மரங்களை வெட்டி கொண்டிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

இப்பகுதியில் தொடர்ந்து அதிகளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டு கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு செங்கல் சூளைக்கு எடுத்து செல்லப்படுகிறது. பனையின் மூலம் எவ்வளவோ பலன்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனை முறையாக பயன்படுத்தாமல் அடிமாட்டு விலைக்கு 500, 1000 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். பனையை வெட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கென்னடி வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: