கிருஷ்ணகிரி அருகே 1339ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் பலவற்றைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி அருகே உள்ள மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பி.ஜி.துர்க்கம் என்றழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோயில் மலையடிவாரத்தில், பெரிய பாறையில் கல்வெட்டு உள்ளதை கண்டுபிடித்துள்ளார். அந்த கல்வெட்டை ஆய்வு செய்த பின், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

ஒரு பெரிய பாறை முழுவதும், ஒரே கல்வெட்டு மூன்று இடங்களில் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுள்ளது. இப்போது நாம் ஒவ்வொரு பக்கத்துக்கும் பக்க எண் கொடுப்பது போல 1, 2 மற்றும் 3 என எண் கொடுத்து அதன் கீழே வெட்டியுள்ளனர். செப்பேடுகளில் ஒவ்வொரு பக்கத்திலும் இவ்வாறு எண்கள் இருப்பதைக் காணலாம். இக்கல்வெட்டு ஒய்சாள மன்னர்களில் கடைசி மன்னனான மூன்றாம் வீரவல்லாளனின் காலத்தைச் சேர்ந்தது. இவன் காலத்திய கல்வெட்டுக்கள் இம்மாவட்டத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் அத்திமுகம், மல்லப்பாடி மற்றும் பி.ஜி.துர்க்கம் என மூன்று இடங்களில் மூன்றாம் வல்லாளனின் கல்வெட்டுக்களை கண்டறிந்துள்ளோம்.

பி.ஜி.துர்க்கம் பகுதியில் காணப்படும் கல்வெட்டின் தொடக்கத்தில் பெரிய அளவிளான கோட்டுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. நடுவில் சக்கரமும், இடப்பக்கம் மனித உருவிலான கண்டப்பேருண்ட பறவையும், வலப்பக்கம் புலியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. அருகில் குடை, சாமரம், சூரியன், சந்திரன் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன. கல்வெட்டின் முடிவில், பூர்ணகும்பம் மற்றும் குத்துவிளக்குகள் காட்டப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டின் தொடக்கத்தில், மூன்றாம் வல்லாளனின் மெய்கீர்த்தி என்னும் அவனது புகழை எடுத்துக்கூறும் பகுதி உள்ளது. அம்மன்னனின் ஆட்சியின்கீழ் இப்பகுதியை சிங்கைய்ய நாயக்கர் மற்றும் அவரது தம்பி வல்லப்ப தெண்ணாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்தனர். இவர்கள் நல்ல உடல் நலத்தோடு வெற்றிகள் பல ஈட்டவேண்டி நம்பிநாயக்கன் என்பவன், திருவேங்கட திருமலையில் உள்ள ஸ்ரீசேனாபதி மடத்துக்கு, இங்குள்ள நரசிங்கநல்லூர் என்ற ஊரை நல்லெருது, நற்பசு, குழிசுங்கம், கட்டளை ஆயம், தட்டார்பாட்டம் முதலான அனைத்து வரிகளையும் நீக்கி, தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு விவரமாய் கூறுகிறது. இத்தானத்தை மடத்தின் சார்பாக, ஆச்சாரியர் திருவேங்கடமுடையானான நல்லான் என்பவர் பெற்றுக்கொள்கிறார்.

இக்கல்வெட்டு 1339ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். சுமார் 700 ஆண்டுக்கு முன்னரே திருப்பதி கோயிலின் மடத்துக்கு, இங்குள்ள ஒரு ஊர் தானமளிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது அக்காலத்திலேயே திருப்பதி புகழ்பெற்றிருந்ததை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கணேசன், ஆசிரியர் ரவி, விஜயகுமார், மாருதி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: