கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காரை எரித்த இளைஞர் அதிரடி கைது-திருமணம் ஆகாத விரக்தியில் எரித்ததாக பரபரப்பு வாக்குமூலம்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காருக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் 5 வருடங்களுக்கு மேலாக தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தாசில்தாரின் கார் தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தாசில்தார் கார் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது அங்கு கண்ணாடி துகள்கள், சுத்தியல், வாட்டர் கேன் இருந்துள்ளது.

இதையடுத்து போலீசார் தாலுகா அலுவலகத்தின் பின்பக்கம் சென்று பார்த்தபோது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித்(24) என்பது தெரியவந்தது. மேலும் தாலுகா அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது ரஞ்சித் கார் கண்ணாடியை சுத்தியால் உடைப்பதும். வாட்டர் கேனில் எடுத்து வந்த வார்னிஷை ஊற்றி தீ வைத்ததும் தெரியவந்தது.

பின்னர் ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் காரை தீ வைத்து எரித்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கடந்த வருடம் தாலுகா அலுவலக 13 ஜன்னல் கண்ணாடியையும், தாசில்தார் கார் கண்ணாடியையும் இவர் உடைத்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து ரஞ்சித்தை செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

Related Stories: