ஆலங்குடி அடுத்த கோவிலூரில் பாழடைந்து வரும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆலங்குடி : ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் கிணற்று நீரையே குடிநீராக பயன்படுத்தி வரும் மக்கள் அந்த கிணறும் பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால் அதனை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கோவிலூர் ஆதிதிராவிடர் காலனியில் 1935ம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்க்கார் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று நீரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி அருகேயுள்ள ஆயிப்பட்டி, கொத்தகோட்டை, கச்சிரான்பட்டி உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த கிராம மக்களும் கடந்த 86 ஆண்டுகளாக குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்பகுதியில், குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரில் உப்பு அளவு அதிகமாக இருப்பதால், அதனை மக்கள் யாரும் குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. இதனால், இந்த பழமை வாய்ந்த கிணற்றில்தான் இதுவரை குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும், இந்த தண்ணீரில் சுவை அதிகம் என்பதால் அனைத்து மக்களுமே இந்த தண்ணீரைத்தான் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கிணறு முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் மக்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தி மனிதன் உயிர் வாழ உயிர் நாடியாக இருக்கும் இந்த கிணற்று குடிநீரை பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கிணற்றில் பல இடங்களில் தற்போது சிதலமடைந்து விட்டது. மேலும் தண்ணீர் இறைப்பதற்கு பயன்படுத்தப்படும் ராட்டையும் தற்போது இல்லாததால் மிகுந்த சிரமத்தோடு மக்கள் பாதுகாப்பற்ற முறையில் தண்ணீர் இறைக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதியில் மது அருந்த குடிமகன்கள் காலி பாட்டில்களை கிணற்றுக்குள் வீசி செல்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

எனவே, மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடனே நடவடிக்கை எடுத்து இந்த சிதலமடைந்த கிணற்றை பாரம்பரியம் மாறாமல் அப்படியே சரி செய்யும் பணியில் ஈடுபடுவதோடு, பொதுமக்கள் தண்ணீர் எடுப்பதற்கு எளிமையான வழி முறைகளையும் பாதுகாப்பு நடைமுறைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: