ம.பி.யில் ஆஷ்ரம் - 3 வெப்தொடர் படப்பிடிப்பில் புகுந்து பஜ்ரங் தளம் அத்துமீறல்!: இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது கொடூர தாக்குதல்..!!

போபால்: மத்தியப்பிரதேசம் ஆஷ்ரம் - 3 வெப்தொடரின் படப்பிடிப்பில் புகுந்து அதன் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பஜ்ரங் தளம் தொண்டர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் பழைய சிறைச்சாலை பகுதியில் ஆஷ்ரம் - 3 வெப்தொடர் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது பஜ்ரங் தளம் தொண்டர்கள் அத்துமீறி உள்ளே புகுந்தனர். ஆஷ்ரம் - 3 வெப்தொடர் இந்து மதத்தை அவமதிப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், இயக்குநர் பிரகாஷ் ஜா முகத்தில் மை பூசி அவமானப்படுத்தினர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை ஓட ஓட விரட்டி இரும்பு தடிகள் மூலம் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். வாகனங்கள், கேமரா உள்பட படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைத்தையுமே பஜ்ரங் தளம் தொண்டர்கள் சூறையாடினார்கள்.

படத்தின் நாயகன் பாபி தியோலை அந்த கும்பல் தேடியது. ஆனால் அப்போது அவர் அங்கே இல்லாததால் தாக்குதலில் இருந்து தப்பினார். இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் எடுத்த படம் ஆஷ்ரம் - 3 வெப்தொடரின் பெயரை மாற்ற வேண்டும் என்று பஜ்ரங் தளம் தொண்டர்கள் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து படக்குழு இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. எனினும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கையும், படப்பிடிப்பை தொடர தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தரவும் மத்தியப்பிரதேச காவல்துறை உறுதியளித்துள்ளது.

Related Stories: