கடந்த 7 ஆண்டுகளில் 157 புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி: 16,000 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாகும்

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 16 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்குவதற்காக, 7 ஆண்டுகளில்  ஒன்றிய அரசு 157 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுவதும் அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகள் இல்லாத பின்தங்கிய மாவட்டங்களில் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க, கடந்த 2014 முதல் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், 16 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட உள்ளன. இதில், ஏற்கனவே 63 மருத்துவ கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.

இதன்மூலம், 6,500 எம்பிபிஸ் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் இந்த கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதற்காக இதுவரையில் ரூ.17,691 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்தி, 10 ஆயிரம்

எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க,வடகிழக்கு மாநிலங்கள், சிறப்பு பிரிவு மாநிலங்களுக்கு 90 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 10 சதவீத நிதியை மாநில அரசுகளும் வழங்குகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சீட்டுக்கு ரூ.1.20 கோடி

* ஒரு எம்பிபிஎஸ் இடத்தை உருவாக்க சராசரியாக ரூ.1.20 கோடி செலவிடப்படுகிறது.

* 15 மாநிலங்களில் உள்ள 48 மருத்து கல்லூரிகளில் கூடுதலாக 3,325 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* இதற்காக, ஒன்றிய அரசின் நிதியாக இதுவரையில் ரூ.6,719 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: