இந்தியாவுடன் மோதல் நிலவும் நிலையில் எல்லைகளை பாதுகாக்க சீன அரசு புதிய சட்டம்: எதிர்த்து போராடும் என எச்சரிக்கை

பீஜிங்: இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளை பாதுகாக்க சீனா புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அதில் பிராந்திய இறையாண்மை மற்றும் எல்லைப் பகுதிகளை குறைப்பதற்கான எந்த செயலையும் எதிர்த்து போராடுவோம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக எல்லைப் பிரச்னை தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், எல்லையை ஒட்டி சீனா தனது கட்டமைப்புகளை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனது எல்லையை ஒட்டிய நிலப்பகுதிகளை பாதுகாக்க சீனா புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. சீன நாடாளுமன்ற நிலைக்குழு இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு புனிதமானது, அதை மீற முடியாது என கூறப்பட்டுள்ள இச்சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இந்த சட்டத்தில், ‘பிராந்திய இறையாண்மை மற்றும் எல்லைப் பகுதிகளை குறைப்பதற்கு உட்படுத்தும் எந்த செயலையும் எதிர்த்து போராடுவோம். எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை ஆதரிப்பதுடன், எல்லையை ஒட்டிய பகுதிகளில் பொதுச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அங்கு மக்களின் வாழ்க்கை, பணிச்சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைப் பகுதிகளில் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு இடையேயான ஒருங்கிணைப்பு வளர்க்கப்படும்.

சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ஆலோசனை ஆகிய கொள்களைப் பின்பற்றி, அண்டை நாடுகளான எல்லைப் பிரச்னைகள், நீண்ட கால பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், எல்லையை ஒட்டிய பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை சீனா மேலும் தீவிரமாக மேம்படுத்தும் என தெரிவித்துள்ளது.

தீராத ஒரே பிரச்னை

சீனா தனது அண்டை நாடுகளில் இந்தியா, பூடானிடம் மட்டுமே எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணாமல் உள்ளது. மற்ற 12 அண்டை நாடுகளுமான எல்லைப் பிரச்னையை தீர்த்துள்ளது. இந்தியாவுடன் சீனா 3,488 கிமீ தூர அசல் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியையும், பூடானுடன் 400 கிமீ சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியையும் கொண்டுள்ளது. சமீபத்தில், பூடானுடன் எல்லைப் பிரச்னையை தீர்க்க சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், இரு நாட்டு பிரச்னைகளும் விரைவில் பேசித் தீர்க்கப்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா, சீனா இடையே 13 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை பிரச்னைக்கு விடை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>