×

வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

மனிதர் வாழ்ந்ததற்கு அடையாளம் அவர்களின் வாரிசுகள் மட்டுமல்ல, அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்காற்றியிருக்க வேண்டும் என்பதே இந்தச் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் பெருங்கனவு. குடும்பத்தில் பெண் ஒருவர் கல்வி பெற்றோ பெறாமலோ கைத்தொழில் ஒன்றைக் கற்று உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தால் அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமும் முன்னேறும்.

அதற்காகவே சமூக ஆர்வலர் மகாலட்சுமி சரவணன் ‘மகளிர் தொழில்முனைவோர் இந்தியா Women Entrepreneurs India (WEI)’ என்ற அமைப்பைத் தொடங்கிப் பெண் தொழில்முனைவோர்களைப் பெருமளவில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இவரின் சேவையைப் பாராட்டி இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிலிருந்து விருதுகளும் அங்கீகாரமும் குவிந்துள்ளது. பெண்களே ஆக்கத்தின் ஊற்று என்ற அவரின் கனவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…

‘‘மலைகளின் அரசியான நீலகிரியின் உன்னத உதகையின் அருகே அமைந்துள்ள கேத்தி என்னும் சிற்றூரில் நான் பிறந்தேன். கோவையிலுள்ள அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் உணவியல் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதுகலைப் பட்டம் பெற்றேன். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். அப்பணியில் எனக்கு மன நிறைவு கிடைக்காததால் மற்றொரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தேன்.

அந்நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு வீட்டில் திருமணம் முடித்து வைத்தாங்க. இரவு நேரப் பணியென்பதால் குடும்பத்திற்கு அந்த வேலை சரியாக இருக்காது அதனால் வேலையை ராஜினாமா செய்தேன். மூன்று மாதங்கள் உருண்டோடின. என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதே சமயம் படித்த படிப்பு வீணாகக்கூடாதுன்னு வீட்டில் இருந்தபடியே ஏதாவதொரு வேலை செய்ய வேண்டும் என்னும் ஆர்வத்தில் அதற்கான வாய்ப்புகளைத் தேடினேன். ‘web content writing’ என்னும் வேலைக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டு மாதத்தில் நான் பார்த்த தொழிலையே என்னுடைய சொந்த தொழிலாக மாற்றினேன். வீட்டிலிருந்தபடியே வேலை தேடும் பெண்களுக்கு ‘content writing’ வாய்ப்புகளை நானே அளிக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் தொழிலில் ஜெயிக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்துள்ளார்.
‘‘தொழில் துவங்கியாச்சு... ஆனால் அதை எவ்வாறு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு இதில் போதிய அனுபவம் இல்லை என்பதால் என்ன செய்வதுன்னு யோசித்தேன். மேலும் எங்க குடும்பத்தில் சொந்தமாக தொழில் துவங்கிய தலைமுறை என்று பார்த்தால் நான் தான்.

வர்த்தகம் என்பது புலி வாலைப் பிடிப்பதற்கு சமம். அதை லாவகமாக பிடித்ததால், நம்முடைய வளர்ச்சியினை யாராலும் தடுக்க முடியாது. என் அப்பாவோ, ‘நீயோ SLET, ARS - NET போன்ற தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றுள்ளாய். கல்லூரிகளில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றலாம். பிசினசில் பல ரிஸ்க் இருக்கு. அது எதற்கு’ என்றார். எனக்கோ நான் செய்து கொண்டிருந்த வேலை பிடித்து இருந்தது. நமக்குப் பிடித்த வேலையைச் செய்தால் நாம் நிச்சயமாக முன்னேறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. என் எண்ணத்தை கணவரிடம் கூறினேன். அவர், “உன்னால் திறம்படச் செய்ய முடியும், எனக்கு உன் திறமை மேல் நம்பிக்கை இருக்கு’ன்னு ஊக்கமளித்தார்.

அந்த உற்சாக துள்ளலுடன், Women Entrepreneurs India (WEI) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினேன். என் நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரராக என் மாமியாரை நியமித்தேன். எழுத்தாளரான அவர், தமிழக அரசு வழங்கிய “தமிழ்ச் செம்மல்” விருது பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் சார்பில் பல விருதுகளை பெற்றுள்ளார். அவர் என்னுடன் இருந்தால் எனக்கு பலமாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது’’ என்றவர் ஆரம்ப காலங்களில் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

‘‘நிறுவனம் துவங்கியாச்சு, அதை திறம் பட செயல்படுத்த வேண்டும். அது அவ்வளவு சுலபமில்லை. காரணம் நிதியின்மை. இதனால் தொழிலை நடத்திச் செல்ல பல சவால்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு தடைகளை தாண்டி வரும் போது பெரிய மலையை கடந்த உணர்வு ஏற்பட்டது. இந்த அனுபவமே பெண்களின் மனநிலைகளை நன்கு உணர வாய்ப்பாக அமைந்தது. தொழில் முனையவிருக்கும் மகளிருக்கு உதவி புரிந்து, வழிகாட்டுதல் அவசியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஊட்ட நினைத்தேன்.

அதற்காக அவர்களுக்கு கூட்டங்கள் நடத்தி, தொழில் தொடங்கும் விதம், வங்கிகள் மூலம் கடன் பெறும் மார்க்கம், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் போன்ற பல விஷயங்களை அவர்களுக்கு கொண்டு சென்றேன். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் பெண்களுக்காக நடத்தினேன். மேலும், தொழில் முனையும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நினைத்து அதற்குண்டான பாடங்களை ஆழ்ந்து படித்தேன். ஆகவே, நான் பெற்ற அறிவதனை அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும் என்னும் ஆவல் மேலோங்கியது.

எனது ஆர்வத்தை உணர்ந்து முக்கியத் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், தொழில் நிகழ்வுகள், கார்ப்பரேட்டுகள் போன்றவற்றில் ஊக்குவிக்கும் பேச்சாளராக அழைக்கப்பட்டேன். ஊடகங்கள் வாயிலாகவும் லட்சக்கணக்கான மக்களை சென்றடைய முடிந்தது. எனது பேச்சு லட்சக்கணக்கான தொழில்முனைவோருக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் பயன்பட்டது. அதற்காகவே தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கல்லூரிகளில் சொற்பொழிவு ஆற்றினேன். இதற்காக பல விருதுகளை பெற்றாலும், ‘தங்கள் வழிகாட்டுதலின் மூலம் நான் என் வாழ்வில் உயர்ந்தேன்” என்று பெண்கள் கூறும் போது, அதுவே எனக்குக் கிடைத்த மகத்தான விருதாகக் கருதுகிறேன்.

இன்று WOMEN ENTREPRENEURS INDIA, பெண்களின் சுய தொழில் மேம்பாட்டிற்காகப் பாடுபடும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. என்னால் சாதிக்க முடியும் என்று என் குடும்பத்தினர் என் மேல் நம்பிக்கை வைத்திருந்தது தான் முக்கிய காரணம். WEI மூலம் மேலும் பல பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும். அதற்காக நான் இரவு பகல் பார்க்காமல் உழைக்க தயார்’’ என்றார் நிறைந்த புன்னகையுடன், மகாலட்சுமி.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!