கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரின் காரை தீவைத்து எரித்த வாலிபர்: திருமணம் ஆகாத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காருக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தாசில்தாரின் கார் உள்ளே நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தாசில்தார் கார் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து கண்டாச்சிபுரம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் கார் உள்புறம் எரிந்து சாம்பலானது. இதையடுத்து போலீசார் தாலுகா அலுவலகத்தின் பின்பக்கம் சென்று பார்த்தபோது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(24) என்றும், காருக்கு தீவைத்தவர் என்றும் தெரிந்தது. தாலுகா அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது ரஞ்சித் கார் கண்ணாடியை சுத்தியலால் உடைப்பதும், வாட்டர் கேனில் எடுத்து வந்த வார்னிஷை ஊற்றி தீ வைப்பதும் பதிவாகி இருந்தது. தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் காரை தீ வைத்து எரித்ததாக ரஞ்சித் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வருடம் தாலுகா அலுவலகத்தில் 13 ஜன்னல் கண்ணாடியையும், தாசில்தார் கார் கண்ணாடியையும் இவர் உடைத்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>