உயிருடன் இருப்பவரை இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு பத்திரம் பதிவு: சென்னையில் பதுங்கிய சார்பதிவாளர் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அன்னவாசல் சாலையை சேர்ந்தவர் குமார் ஆனந்த் (53). பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இவர், நெடுங்காடு அருகே பருத்திகுடியில் தனக்கு சொந்தமான ரூ.4கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலத்தை தாய்மாமன் தேவராஜ் பராமரிப்பில் கொடுத்தார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிலம் தரிசாக விடப்பட்டது. இந்நிலையில், குமார்ஆனந்த் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்தை தாய்மாமன் தேவராஜிக்கு உயில் எழுதியதாகவும் தயார் செய்துள்ளனர். அதன்மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநள்ளாறு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பாஸ்கர் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து குமார் ஆனந்த் உறவினர் குணசேகரன், திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தாய்மாமன் தேவராஜ், உடந்தையாக இருந்த செய்யது இப்ராகிம், பாஸ்கர் ஆகிய 3 பேரை கடந்த 19ம்தேதி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவான சார்பதிவாளர் ஜெயக்குமார், சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு சென்னை சென்ற போலீசார், ஜெயக்குமாரை கைது செய்து காரைக்காலுக்கு நேற்று கொண்டு வந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>