வாயில் பிளாஸ்டர் ஒட்டி மூச்சுத்திணறடித்து குழந்தை கொலை: தன் சாயலில் இல்லாததால் தந்தை வெறிச்செயல்

திருமலை: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாணதுர்க்கம் நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா, இவரது மனைவி சிட்டம்மா. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்ததில் இருந்து தன் சாயலில் இல்லை, தனது குடும்பத்தினர்கள், உறவினர்கள் சாயலிலும் இல்லை என்றும், நமக்கு மகள் வேண்டாம் மகன்தான் வேண்டும் என்றும் மல்லிகார்ஜூனா கூறிவந்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. மேலும், மல்லிகார்ஜூனாவுக்கு தனது மனைவி மீது நாளடைவில் சந்தேகம் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், மல்லிகார்ஜூனா வீட்டில் இருந்து குழந்தையை உறவினர் ஒருவருக்கு காண்பித்து வருவதாக சிட்டம்மாவிடம் கூறிவிட்டு நேற்று தூக்கிச்சென்றார்.

பின்னர், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு மல்லிகார்ஜூனா வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த சிட்டம்மா மல்லிகார்ஜூனாவின் உறவினர்கள் அனைவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார். ஆனால், உறவினர்கள் வீட்டிற்கு மல்லிகார்ஜூனா குழந்தையுடன் செல்லவில்லை. எனவே குழந்தையை மல்லிகார்ஜூனா ஏதாவது செய்து விட்டாரா? என எண்ணிய சிட்டம்மா போலீசில் புகார் ெசய்தார். அதன்பேரில், போலீசார் குழந்தையுடன் மாயமான மல்லிகார்ஜூனாவை தேடினர். அப்போது, கல்யாணதுர்க்கம் அருகே ஏரி அருகே கோணிப்பை பை ஒன்று கிடந்தது தெரியவந்தது. இதனை சந்தேகத்தின்பேரில் போலீசார் திறந்து பார்த்தனர். அதில், மல்லிகார்ஜூனாவின் குழந்தை வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நிலையில் கோணிப்பையில் சடலமாக இருந்தது.

குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி மூச்சு திணறடித்து கொடூரமாக கொன்ற மல்லிகார்ஜூனா பையில் வைத்து ஏரி பகுதியில் வீசிவிட்டு சென்றது போலீசாருக்கு தெரிந்தது. தொடர்ந்து, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிந்து மல்லிகார்ஜூனாைவ தேடி வந்தனர். இந்நிலையில், கிராமம் அருகே உள்ள பகுதியில் தலைமறைவாக இருந்த மல்லிகார்ஜூனாவை நேற்று மாலை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், ‘மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளது. அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என நினைத்து, அதன் வாயில் பிளாஸ்டர் ஒட்டி கொலை செய்து கோணிப்பையில் அடைத்து ஏரி அருகே வீசினேன்’ என போலீசில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>