‘சரக்கு’ அடிப்பவர் காங். உறுப்பினராக முடியாது! புதிய உறுதிமொழி படிவத்தில் தகவல்

புதுடெல்லி: மது மற்றும் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பவர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினராக சேர முடியும் என்ற வகையில், புதிய உறுதிமொழி படிவம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகக் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்பவர்களுக்கான 10 புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் படிவத்தில் கொடுக்கப்பட்ட இந்த புதிய விதிகளானது உறுதிமொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘வரையறுக்கப்பட்ட அளவிற்கு மேல் ெசாத்து வைத்திருக்க மாட்டேன். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். கட்சிப் பணிக்காக உடல் உழைப்பை கொடுக்க தயங்க மாட்டேன். மது மற்றும் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பேன். கட்சியின் கொள்கைகளை பகிரங்கமாக விமர்சிக்க மாட்டேன்.

கதர் ஆடைகளை அணிவேன். சமூக பாகுபாடு காட்டமாட்டேன். சமூகத்தில் உள்ள பாகுபாட்டை ஒழிக்க பாடுபடுவேன்’ போன்ற உறுதிமொழிகளை ஏற்றுதான் அந்த படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 1 முதல் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சியின் முழு நேர புதிய தலைவருக்கான தேர்தல் அடுத்தாண்டு ஆக. 21 முதல் செப். 20ம் தேதிக்குள் நடைபெறும் என்று, சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கட்சியின் புதிய விதிகள் குறித்த மூத்த காங்கிரஸ் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், ‘ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகள்தான். இதுபோன்ற விதிமுறைகள் எங்கள் கட்சியின் கொள்கையாக இருக்கிறது. புதிய மற்றும் பழைய உறுப்பினர்கள் அனைவரும் இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Related Stories:

More
>