×

ஆர்யன் கானுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களை திரட்ட திட்டம்: ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் போதைப்பொருள் தடுப்பு துறையினர் நடவடிக்கை..!

மும்பை: நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களை திரட்ட போதைப்பொருள் தடுப்பு துறையினர் திட்டமிட்டுள்ளது. கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆர்யன் கான், அர்பஸ் கான், முன்மும் தமேச்சா உட்பட 5 பேர் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், பின்னர் சிறப்பு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதன் மீதான விசாரணை 26ம்தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய ஏஜென்ட்களுடன் ஆர்யன் கான் அடிக்கடி வாட்ஸ் ஆப் சாட் மேற்கொண்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இது இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. ஆர்யன் கானுடன், நடிகர் சங்க்கி பாண்டேயின் மகள் நடிகை அனன்யா பாண்டேயும் இந்த வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, தெற்கு மும்பையில் பல்லார்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனது தந்தையுடன் அனன்யா பாண்டே 21-ம் தேதி வந்திருந்தார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. 22-ம் தேதி அவரிடம் விசாரணை நடத்த அழைத்திருந்தனர். இதன்படி நேற்று முன்தினமும் அவர் ஆஜரானார். வாட்ஸ் ஆப் சாட்டிங்குகள் குறித்தும், போதைப்பொருள் விற்பனை, சப்ளையில் ஆர்யன் கானுக்கு எந்தெந்த தொடர்புகள் உள்ளன என்பன போன்ற கேள்விகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கேட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாகவும், இதில் ஆர்யன் கானுடனான சாட்டிங், போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை அனன்யா பாண்டே மறுத்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. மீண்டும் 3வது கட்ட விசாரணை நடத்த 25ம் தேதி ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களை திரட்ட போதைப்பொருள் தடுப்பு துறையினர் திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருப்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Aryan Khan ,Drug Enforcement Department , Plan to gather additional evidence against Aryan Khan: Drug Prevention Department action as bail petition is coming up for hearing ..!
× RELATED போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு:...