பெரும்புதூர் பகுதியில்; 10 நாட்களில் 3 செயின் பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டிலும் தலா 2 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். மேலும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகின்றனர்.  தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது. இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் இளைஞர்களை தாக்கி செல்போன், பணம், நகை பறிப்பு, பைக் திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.இந்நிலையில், கடந்த 10ம்தேதி ஸ்ரீபெரும்புதூர் டோல்கெட் அருகில் நடந்து சென்ற மூதாட்டியிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.

இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் போலீசாரால் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார். மற்றொருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயக்கொளத்தூர் பகுதியில் பைக்கில் சென்ற தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிடம் 5 சவரன் தங்க சங்கிலியை 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுபோல் நேற்று இரவு தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. இதனால், கடந்த 10 நாட்களில்  3 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

Related Stories: