கோவையில் மேலும் 2 மதிமுக நிர்வாகிகள் ராஜினாமா

கோவை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி, மதிமுக தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக இளைஞர் மாநில அணி செயலாளர் கோவை ஈசுவரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஈசுவரனை தொடர்ந்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 2 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மதிமுக செயலாளர் குடை முத்துசாமி, மதுக்கரை கிழக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பெருமாள்சாமி ஆகிய இருவரும் தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதத்தை வைகோவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெருமாள்சாமி கூறுகையில், ‘‘வைகோ மதிமுகவை துவக்கிய நாள் முதல் அவருடன் பயணித்து வருகிறேன். கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வைகோவின் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. கொள்கையில் இருந்து வைகோ விலகியது ஏமாற்றத்தை தருகிறது. எனவே, அக்கட்சியில் தொடர்ந்து பயணிக்க முடியாததால் அதில் இருந்து விலகுகிறேன்’’ என்றார். குடை முத்துசாமி கூறுகையில், ‘‘வாரிசு அரசியலுக்கு எதிராக வைகோ நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் நெடும்பயணம் மேற்கொண்டார். அவருடன் 28 ஆண்டு காலம் தொடர்ந்து பயணம் செய்து வந்தேன். தற்போது அவரே வாரிசு அரசியலுக்கு வழி வகுத்துள்ளார். இதனை ஏற்க முடியாது. மன வேதனை அடைந்தேன். கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன்’’ என்றார்.

Related Stories:

More
>