×

காக்கிச் சீருடையில் கலக்கும் காரிகை!

நன்றி குங்குமம் தோழி

பரபரப்புகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத தியாகராய நகர் பேருந்து நிலையம். பல வழிகளில் இயக்கப்படும் பேருந்துகள் ஆங்காங்கே நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. அந்த சமயத்தில் அமைதியாக எந்த ஒரு ஆராவாரம் இன்றி உள்ளே நுழைந்தது தடம் எண் 13 பேருந்து. அதில் இருந்து ஒவ்வொரு பயணிகளும் இறங்கும் வரை பொறுமையாக காத்திருந்தார் நடத்துனர். பயணிகள் எப்போது இறங்குவார்கள், ஏறலாம் என்று காத்திருந்தவர்களை நோக்கி, ‘‘முண்டியடித்து ஏற வேண்டாம்... பேருந்து 10 நிமிடம் நிற்கும்’’ என உரத்த தொனியில் குரல் எழுப்ப, மகுடி பாம்பாய் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பயணிகள் ஏறினார்கள்.

அந்த உரத்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் பெண் நடத்துனர் விஜயாம்பிகா. பேருந்து ஓட்டுனர் பணியில் இயங்கி வரும் பெண்கள் தற்போது, நடத்துனர் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள துவங்கி உள்ளனர். நடத்துனரா தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் விஜயாம்பிகா.
“எனக்குச் சொந்த ஊர் வந்தவாசி. பன்னிரெண்டாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அப்பா, சென்னை மாநகரப் பேருந்து கழகத்தில் நடத்துனராகத்தான் பணிபுரிந்து வந்தார். அப்பா தினமும் பேருந்தில் நடக்கும் சம்பவங்களை பற்றி கூறுவார்.

பலதரப்பட்ட மக்கள். அவர்களுடன் பயணிக்கும் அனுபவங்கள்... இப்படி கேட்டு வளர்ந்த எனக்கும் அப்பாவைப் போல் நடத்துனராக பணிபுரி வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆண்களுக்கே சவாலான வேலை, பெண்கள் என்றால் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருந்தாலும் அந்த சவாலான வேலையில் தான் சேர வேண்டும் என்று நான் மிகவும் உறுதியாக இருந்தேன். எனவே, 2008-ம் ஆண்டு தியாகராய நகர் பணிமனையில், நடத்துனராக வேலையில் சேர்ந்தேன்.

அப்போதில் இருந்து, தியாகராய நகர் முதல் பிராட்வே இடையே இயக்கப்படும் தடம் எண் 13 பேருந்தில் பத்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். இன்று பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், இன்றைய சூழலில் பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இருக்கின்றது. நானும் என் குடும்பத்துக்கு உதவ நினைச்சேன். மேலும் எனக்கு பிடித்தமான வேலை என்பதால், சேர்ந்தேன்’’ என்றவர் தன் பணியில் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி விவரித்தார்.

‘‘எல்லாரையும் போலவே, எங்களுக்கும் எட்டு மணிநேர வேலைதான். ஆனால் நாங்க ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு வேலை செய்ய முடியாது. ஏனென்றால், பேருந்தின் முன் பக்கமும், பின்னாடியும் பயணிகள் அனைவரும் ஏறி விட்டார்களா? என்று கட்டாயம் பார்க்க வேண்டும். மேலும், டிக்கெட் கொடுப்பதற்கும் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு அடிக்கடி சென்றுவர வேண்டும். அந்த அளவிற்கு இது கஷ்டமான வேலைதான். இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டி இருப்பதால், அதற்கேற்றவாறு பேருந்தின் நடுவில் நான் நின்று
கொள்வேன். முழு விருப்பத்துடன், ஈடுபாட்டுடன் இந்த வேலையைச் செய்து வருவதால், கஷ்டம் கொஞ்சமும் தெரிவது இல்லை.

ஆண்கள் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றால், ஓய்வு எடுக்க முடியும். ஆனால், பெண்களால் கொஞ்சம்கூட ஓய்வு எடுக்க முடியாது. வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாலும், இரவு நேர உணவு தயாரிக்கணும், வீட்டை மற்றும் குழந்தைகளையும் பராமரிக்கணும். என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருப்பதால், என்னால் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட முடிகிறது’’ என்றார் விஜயாம்பிகா. ‘‘நாங்க கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்குச் செல்வோர், சமூக விரோதிகள் எனப் பல தரப்பட்ட நபர்களை அன்றாடம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். எல்லா ரூட்டிலும் நாங்கள் போக மாட் டோம். ஷாட் ரூட் எது என்று பார்த்து அதைத்தான் எங்களுக்கு ஒதுக்குவார்கள்.

தியாகராய நகரில் இருந்து பிராட்வே செல்ல ஐம்பது நிமிஷம்தான் ஆகும். அதனால், அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு, 5, 6 ஸ்டாப்பிங்குள்ளாகவே இறங்கி சென்று விடுவார்கள். சில நேரங்களில் பிரச்னை செய்வதற்கென்றே பஸ்ஸில் ஏறுவார்கள். அதுமாதிரியான இக்கட்டான நேரங்களில், ஓட்டுனர், பயணிகள் உதவியுடன் அவர்களை கீழே இறக்கி விட்டுவிடுவேன். என்னுடைய ரூட்டில், பி.எஃப் ஆபீஸ், கோஷா ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை ஜி.ஹெச். ஆகியவைதான் முக்கியமான ஸ்டாப்பிங். பொதுவாக பயணிகள் ஒரே பஸ்சில் தான் பயணம் செய்வார்கள். அன்றாடம் அந்த வழியில் பயணம் செய்பவர்கள் என்னுடைய பஸ்சிற்காக காத்திருந்து ஏறுவார்கள்.

குறிப்பாக நோயாளிகள் மற்றும் முதியவர்கள். காரணம் பயணிகளின் பாதுகாப்பு எனக்கு முக்கியம். அதனால் இவர்கள் பொறுமையாக பேருந்தில் ஏறும் வரை காத்திருந்து பிறகு தான் ஓட்டுனருக்கு சிக்னல் கொடுப்பேன். அவசரப்படமாட்டேன். அதே போல் எல்லாரும் இறங்கி விட்டார்களா! என்று தெரிந்துகொண்டுதான், விசில் அடிப்பேன். எல்லா கண்டக்டர்களுக்கும் ‘பீக் அவர்ஸ்’ என்பது சவாலான விஷயம். பேசஞ்சர்ஸ் ஏறிட்டாங்களா? இறங்கிட்டாங்களா? எனப் பார்த்தல், டிக்கெட் கொடுத்தல், திருடர்களை எதிர்கொள்ளுதல் எனப் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய வேண்டியிருக்கும்.

பயணிகள் ஒத்துழைப்பு தருவதால் எதுவும் சிரமமாகத் தெரிவது இல்லை. ‘பஸ் டே’ எல்லா தரப்புக்கும் இடையூறாக உள்ள விஷயம். கொஞ்சம் பேர்
செய்கின்ற தவறால், நிறைய பேர் பாதிப்பு அடைகின்றனர். எனவே, ‘பஸ் டே’ என்ற ஒன்று இருக்கக்கூடாது. பெரும்பாலும் எங்களுக்கு மார்னிங் டூட்டிதான். 5.30 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் மூன்று, மூன்றைக்கெல்லாம் முடிந்து விடும். பொதுமக்கள் வசதிக்காகத்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை உணராத நிறைய பேர், பஸ் நிற்பதற்கு முன்னாடியும், சிக்னலில் நிற்கும்போதும் ஓடிவந்து ஏறி, ஆபத்தை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதைத் தவிர்த்தால், பேருந்து பயணம் இனிதாக அமையும்.’’ என்றார் நடத்துனர் விஜயாம்பிகா.  

தொகுப்பு: விஜயகுமார்

படங்கள்: ஜி.சிவக்குமார்  

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!