நீர்வரத்து 28,650 கனஅடியாக உள்ளது.! மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தொட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு, காவிரி மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த ஒருவாரமாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் 13,477 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 39,634 கனஅடியாக அதிகரித்தது. இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 28,650 கனஅடியாக குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கனஅடி, கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 95.10 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 99.68 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நீர்மட்டம் 4.58 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.42 டிஎம்சியாக உள்ளது.

இன்று பிற்பகலில் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 75 அடி வரை சரிந்தது. ஆனால் தற்போது பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து 100 அடியை எட்டி உள்ளது. இதனால் ஜனவரி மாதம் இறுதி வரை டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது.

Related Stories:

More
>