×

சின்னமனூர் பகுதியில் இப்போ விழுமோ...எப்போ விழுமோ: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

சின்னமனூர்: மாவட்டத்தில், நகர் மற்றும் கிராமம் என எல்லா இடங்களிலும் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்திற்குள்ளாகும் நிலையில் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின்வாரிய துறையின் மூலம் மின்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சீரமைக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளன. சின்னமனூர் அருகே எரணம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு கோணாம்பட்டி, முத்தையன்  செட்டிபட்டி, கந்தசாமிபுரம் உள்ளிட்ட உட்கிடை கிராமங்களும் உள்ளன. சங்கராபுரத்திலிருந்து தேவாரம் சாலை கோணாம்பட்டி பிரிவிலிருந்து எரணம்பட்டிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.  கோணாம்பட்டி முன்பாக இரண்டு மின்  கம்பங்கள் பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.

 அதே போல் கோணாம்பட்டியிலிருந்து முத்தையன் செட்டிபட்டி இடையே 2 மின்கம்பங்கள் சாலையை தடுக்கும் வகையில்  மறைத்து நிற்கிறது. இதனை மாற்றக் கோரி பொதுமக்கள் மின்வாரியத்தில் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே உயிர்பலி ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மின்கம்பம் சேதமடைந்து பல மாதங்களாக மின் வயர்களின் தயவில் தாங்கி நிற்கிறது. இல்லையென்றால் எப்பவோ கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கும். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனே மாற்ற மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Sinamanur ,Epho , Chinnamanur, area, now fall, when fall
× RELATED அதிமுக ஆட்சியில் 6 கோடி அம்போ...