×

வைகை அணையில் காட்சிப்பொருளாக உள்ள படகு குழாம்: செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

ஆண்டிபட்டி:  ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இந்த வைகை அணை பூங்காவில் வலது கரை பூங்கா, இடதுகரை பூங்கா என பிரிக்கப்பட்டு, இந்த இரண்டு பூங்காக்களிலும் குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு சிறுவர் பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், பெரியார் மாதிரி பூங்கா, மலைக்குன்றுகளில் அமைக்கப்பட்ட வரைபடங்கள், புல் தரைகள், வண்ண விளக்குகள், பொம்மைகள், செயற்கை நீரூற்றுகள், உல்லாச ரயில் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளது.

இங்கு வலது கரை பூங்கா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் அமைக்கப்பட்டது. படகு குழாம் பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதில் பெடல்கள் மூலம் இயங்கும் 5 படகுகள் விடப்பட்டது. 2 மற்றும் 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் படகுகள் அமைக்கப்பட்டது. அதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்வதற்கு ரூ.90ம், 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் படகிற்கு  ரூ.170 கட்டணமும் நிர்ணயம் செய்து முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த படகு குழாம் கிடப்பில் போடப்பட்டு தற்போது வரை காட்சிப் பொருளாகவே உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘‘படகு குழாம் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றோம். எனவே சேதமடைந்த படகுகளை சரிசெய்து படகு குழாமை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Vaigai Dam , Vaigai Dam, exhibit, boat crew
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு