சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு தொட்டபெட்டா வெறிச்சோடுகிறது

ஊட்டி:  தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கும் நிலையில், தொட்டபெட்டா காட்சி முனை வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி  மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா,  ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களுக்கு  செல்வது வழக்கம். குறிப்பாக, வரலாற்றில் இடம் பெற்றுள்ள தொட்டபெட்டாவை காண  சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த  சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா  பயணிகள் அதிகளவு தொட்டபெட்டா செல்வது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா  பாதிப்பு அதிகரிக்கவே கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலா தலங்கள் அனைத்தும்  மூடப்பட்டன. அப்போது தொட்டபெட்டா காட்சிமுனையும் மூடப்பட்டது. இதனால்,  சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம்  பெய்த கன மழையின் போது, இச்சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை  துண்டிக்கப்பட்டது. இதனால், கடந்த 7 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள்  செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போதும் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடையுள்ள நிலையில்,  தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.  இதனால், சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறையினருக்கு வருவாய் இழப்பும்  ஏற்பட்டுள்ளது.

Related Stories: