ஆண்டிமடம், விளந்தை பகுதிகளில் பன்றிகளால் சுகாதார கேடு: கட்டுப்படுத்த கோரிக்கை

ஆண்டிமடம்: ஆண்டிமடம், விளந்தை பகுதியில் பன்றிகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், விளந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். அவர்கள் வளர்த்து வரும் பன்றிகளை தனி ஒரு இடத்தில் அடைத்து வைத்து வளர்க்கப் படாமல் தானாகவே தெருக்கள் மற்றும் விவசாய நிலங்களில் மேய்ந்து வளர்ந்து குட்டி போட்டு வளர்ந்து வருகிறது. அதன் உரிமையாளர்கள் பன்றிகளை அவ்வப்போது கண்காணித்து நன்றாக வளர்ந்த பிறகு அதை பிடித்து விற்று பணம் ஈட்டி வருகின்றனர்.

தெருக்களில் பன்றிகள் கும்பலாக மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் எல்லாம் அடைந்து சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்துள்ள நிலக்கடலை, எல், கரும்பு போன்ற பயிர்களை மண்ணை தோண்டி நாசம் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வேதனைக்கு உள்ளாகின்றனர். மேலும் விளந்தை வாரியார் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது.

அதன் அருகே பன்றிகள் கும்பலாக படுத்துக்கொண்டு சேறும் சகதியையும் ஏற்படுத்துவதால் இங்கிருந்து வினியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தினால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுவிடுமோ என இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் விளந்தை, ஆண்டிமடம் பகுதி தெரு மக்கள் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: