தனியார் தொழிற்சாலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பா?: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்: தனியார் தொழிற்சாலையில் இருந்து ரகசியமாக குழாய் அமைத்து கழிவுநீரை பவானி ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து பவானியாறு துவங்குகிறது. இது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீராதாரமாக உள்ளது.

ஏற்கனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து முதல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் திருப்பூர் 2வது குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் எஸ்.எம்.நகரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை முன்பாக குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றது.

 நேற்று இந்த பகுதியில் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டும் போது தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குழாய் எதிர்பாராத விதமாக உடைக்கப்பட்டது.இதைப் பார்த்த பொது மக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அங்கிருந்தவர்கள் இந்த தொழிற்சாலையில் துணிகளுக்கு சாயமேற்றிய பின்னர் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு நீரானது பூமிக்கடியில் ரகசியமாக புதைத்து வைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலமாக நேரடியாக பவானியாற்றில் கலக்கி விடப்படுகிறது. இதனால் பவானியாறு மாசுபட்டு வருகிறது. என்று குற்றம் சாட்டினர். மேலும் தற்போது சாயக்கழிவு நீரை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கோவையிலிருந்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த ஆய்வகப் பணியாளர்கள் சம்பவ இடத்திலிருந்து சோதனைக்காக கழிவு நீரை எடுத்துச் சென்றனர் இதன்பின்னரே அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More
>