‘வாட்டர் பால்ஸ், ஹெலிகாப்டர்...’புதுசா வந்திருக்கும் பட்டாசுதானுங்க: தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு புதுவரவு

சேலம்: நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவரவாக வாட்டர் பால்ஸ், ஹெலிகாப்டர் பட்டாசு ரகங்கள் வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் நமது ஞாபத்திற்கு வரும். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சேலம் முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் தேர் நிலையம், புதிய பஸ் ஸ்டாண்ட், 5ரோடு, சாரதா கல்லூரி சாலை, தாதுபாய்குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ஜவுளிகளின் விற்பனை களை கட்டியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் ஸ்டால்களில் இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளின் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. அதேபோல் தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக சிவகாசியில் பட்டாசு விற்பனையாளர்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு பட்டாசு கேட்டு ஆர்டர் கேட்கும் விற்பனையாளர்களுக்கு பட்டாசு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சேலம் செவ்வாய்பேட்டையில் மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களாக பட்டாசு விற்பனைக்கு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. விற்பனைக்கு வரும் பட்டாசுகளை சேலத்தை சுற்றியுள்ள சில்லரை விற்பனையாளர்கள், நாமக்கல், தர்மபுரியை சேர்ந்த விற்பனையாளர்கள் வாங்கிச்செல்கின்றனர்.இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு உற்பத்தி தொடங்கிவிடும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் தமிழகத்திற்கு 50 சதவீதம் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத பட்டாசுகள் வட மாநிலங்களுக்கு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியை சேர்ந்த வியாபாரிகள்  சிலர் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பட்டாசு கடைகள் வைப்பது வழக்கம். இதைதவிர உள்ளூரை சேர்ந்த வியாபாரிகளும் கடை வைப்பார்கள்.

 நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாட்டர்பால்ஸ் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசு, லார்டு ஆப் லார்டு என்ற மூன்று விதமான புஷ்வாணம் என்ற புதுவகை பட்டாசுகள் வந்துள்ளது. வாட்டர்பால்ஸ் பட்டாசு கீழிருந்து மேலே தண்ணீர் செல்வதுபோல சென்று மீண்டும் கீழே அருவிபோல வரும். ஹெலிகாப்டர் பட்டாசு ெஹலிகாப்டர் போல இருக்கும். திரியில் நெருப்பு வைத்ததும் மேலே பறந்து பூக்கள் போல கீழே கொட்டும். நீமோ என்ற பட்டாசு மீன் வடிவில் இருக்கும். இந்த வகை பட்டாசின் வால் பகுதியில் ஒரு குச்சி இருக்கும். அதில் இருக்கும் திரியில் நெருப்பு வைத்தால் மீன் வாயில் பூ போல் புஷ்வாணம் வரும். நவீன சாக்லேட் சங்குச்சக்கரம் என்ற பட்டாசும் புது வரவாக வந்துள்ளது. இந்த வகை பட்டாசுகளை பொதுமக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.இதைதவிர வானில் வர்ணஜாலம் காட்டும் வெடி, மினி புல்லட் பாம், கிளாசிக் பாம், 100 வாலா முதல் பத்தாயிரம் வாலா பட்டாசு, விதவிதமான புஷ்வாணம், சங்குச்சக்கரம், கம்பி மத்தாப்பூ, சாட்டை, லட்சுமி வெடி, குருவி வெடி, குழந்தைளுக்கான தரையில் போட்டால் வெடிக்கும் கொள்ளு பட்டாசு, சுருள் கேப் உள்பட பல்வேறு விதமான பட்டாசுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர்.

Related Stories: