பர்கூர் மலைப்பாதையில் 2வது நாளாக 10 இடங்களில் நிலச்சரிவு: வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை

அந்தியூர்:  பர்கூர் மலைப்பாதையில் 2வது நாளாக 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று 2வது நாளாக அந்தியூரில் இருந்து வரட்டுப்பள்ளம், தாமரைக்கரை, பர்கூர், தட்டக்கரை, கர்கேகண்டி செல்லும் மலை பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரோடுகளில் நிலம் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அகற்ற முடியாத பெரிய பாறைகள் ரோட்டின் ஓரங்களில் கிடப்பதால் இலகுரக வாகனங்கள், பஸ், கனரக வாகனங்கள் எதுவும் தற்போது செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தமிழக-கர்நாடக இடையே மலைப்பாதை ரோட்டில் அனைத்து போக்குவரத்திற்கும் நேற்று முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால் இன்னும் சில நாட்களுக்கு போக்குவரத்து வாகன தடை நீடிக்கும் என்றும், மழை இல்லாத பட்சத்தில் 4 நாட்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக இடையே வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: