தீபாவளி பண்டிகையையொட்டி 27ம் தேதி முதல் டியுசிஎஸ் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: தமிழக அரசு ஏற்பாடு

தீபாவளி பண்டிகையையொட்டி, வருகிற 27ம் தேதி முதல் டியுசிஎஸ் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இங்கு 20 முதல் 50 சதவீதம் விலை குறைவாக பட்டாசு கிடைக்கும். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (டியுசிஎஸ்) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். தமிழக அரசின், பொதுத்துறை நிறுவனமான கூட்டுறவு கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதால், வெளிமார்க்கெட்டில் வாங்குவதைவிட இங்கு தரமான மற்றும் நியாயமான விலையில் கிடைக்கும்.

இந்த நிலையில், இந்த ஆண்டும் வருகிற தீபாவளியொட்டி டியுசிஎஸ் நிறுவனம் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகளை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கவும் பட்டாசு விலை பட்டியல் அனைத்தும் கணினி மென்பொருளை பயன்படுத்தி விற்பனை செய்ய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளதாக டியுசிஎஸ் மேலாண்மை இயக்குநர் பாபு கூறியுள்ளார்.

இதுகுறித்து டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் இராஜன் சுவாமிநாதன் கூறும்போது, டியுசிஎஸ் நிறுவனம் மூலம் வருகிற 27ம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொங்கப்பட உள்ளது. குறிப்பாக, சிவகாசியில் தரமான நிறுவனம் தயாரித்துள்ள பட்டாசுகளை வாங்கி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய கூட்டுறவு துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு மட்டும்  ரூ.3.5 கோடி அளவுக்கு சிவகாசியில் இருந்து பட்டாசு கொள்முதல் செய்யப்பட உள்ளது. சென்னை நகரில் டியுசிஎஸ் நிறுவனம் மூலம் தேனாம்பேட்டை காமதேனு வளாகம், ராஜாஅண்ணாமலைபுரம் சுயசேவை பிரிவு வளாகம், திருவல்லிக்கேணி தலைமை அலுவலகம், ராயப்பேட்டை சுய சேவை பிரிவு வளாகம், பெசன்ட்நகர், அடையாறு, சைதாப்பேட்டை, பிராடீஸ் ரோடு, நுங்கம்பாக்கம், சாலிகிராமம், வில்லிவாக்கம், பெரியார் நகர் ஆகிய இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த 12 கிளைகளிலும் ஒரே விலையில், ஸ்டாண்டர்ட்  உள்ளிட்ட தரமான பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். டியுசிஎஸ் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதைவிட 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் பட்டாசுகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்ய அந்தந்த பகுதி மேலாண் இயக்குனர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Stories: