அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் எதிரொலி தனியார் பஸ்களில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்ப தடை: நெல்லை எஸ்பி எச்சரிக்கை

நெல்லை: நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் இரு பிரிவினர் இடையே அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக போடப்பட்டிருந்தது. வெளிமாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணித்தனர். தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்களை ஒடுக்குவதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கிராமங்களுக்கு அதிகம் இயக்கப்படும் பஸ்களில் பாடல்கள் ஒலிபரப்புவதால் சாதி, மத ரீதியிலான தகராறுகள் ஏற்படுவதாக உளவுத்துறை மூலம் தெரிய வந்தது. இதுதொடர்பாக நெல்லை எஸ்பி மணிவண்ணன் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில், பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கி வரும் தனியார் பஸ்களில் சாதி, மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இதை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பஸ்களிலும் சாதி, மத ரீதியான பாடல்கள் அல்லது வசனங்களை ஒலிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறி செயல்படும் தனியார் பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: