சென்னை: மரணத்துக்கு பிறகும் கூட, ‘சாதி மனிதனை விடவில்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டியைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு அதை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதனால், சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.