×

சிறுமியிடம் பாலியல் சீண்டல் கிரிக்கெட் பயிற்சியாளர் சிக்கினார்: டைரக்டர் ஷங்கரின் மருமகன், சம்பந்திக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்ட கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள டைரக்டர் ஷங்கர் சம்பந்தி, மருமகன் உள்ளிட்ட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் மூடப்பட்டபோது, முத்தரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த மாணவி, புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவில் புகார் செய்தார். குழுவின் தலைவர் சிவசாமி  விசாரணை நடத்தியபின், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மற்றும் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், பிரபல சினிமா டைரக்டர் ஷங்கரின் மருமகனும், புதுவை கிரிக்கெட் அணி கேப்டனுமான ரோஹித், அவரது தந்தையும் புதுவை கிரிக்கெட் சங்க முன்னாள் செயலாளருமான தாமோதரன், புதுவை கிரிக்கெட் சங்க இணை செயலாளர் வெங்கட் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 5 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் பத்துக்கண்ணு பகுதியில் பதுங்கி இருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தாமரைக்கண்ணனை நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தலைமைறைவாக உள்ள டைரக்டர் ஷங்கரின் சம்பந்தி தாமோதரன், மருமகன் ரோஹித் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Shankar ,Sambandi , To the girl, sex, Shankar's nephew, sambandi, web
× RELATED மாநாட்டுக்கு சங்கர் பாராட்டு..!