காவலர் வீரவணக்க நாள் விழாவில் நெகிழ்ச்சி பார்வையற்றவர் பாடிய வீரவணக்க பாடல் வீடியோ: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு திருவள்ளூர் மாவட்ட போலீசுக்கு பாராட்டு

சென்னை: காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பெண் காவலர் எழுதி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடிய வீர வணக்க பாடல் வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அவர்களை பாராட்டினார்,  ‘காவலர் வீரவணக்க’ நாள் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாதுகாப்பு பணியின்போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது திருவள்ளூர் மாவட்ட தலைமை காவலர் ஆர்.சசிகலா எழுதி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில்  பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடிய ‘வீர வணக்க பாடல்’ என்று புதிய வீடியோ வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வீடியோவை வெளியிட்டு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி, பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், பாடகர் ஆகியோரை பாராட்டினார்.

 திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் ஏற்பாட்டில் இந்த வீடியோ தயாரானது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் “2021 காவலர் வீரவணக்க நாளையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல்துறை நாயகனுக்கும் ’வீர வணக்கம்’ பாடலை சமர்ப்பிக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்பி வருண் குமார் கூறும்போது, காவலர் வீரவணக்க நாளையொட்டி பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறும் என்று டிஜிபி சைலேந்திர பாபு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் கொரோனாவில் தங்களின் உயிரை தியாகம் செய்த காவலர்களுக்காக திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பில் வீரவணக்க வீடியோ பதிவு வெளியிட முடிவு செய்தோம். அப்போதுதான் தலைமை காவலர் சசிகலா பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை எழுதியது தெரியவந்தது. இந்த பாடலை காவலர் சசிகலா, திருமூர்த்தி மற்றும் நாகராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். ஒரே நாளில் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலை வௌியிட்ட முதல்வர் பாடலை கேட்டு பாராட்டினார். இந்த பாடல் நிச்சயம் பரிசை பெறும் என்று நம்புகிறோம். இந்த பாடல் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகியுள்ளது என்றார். இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, இந்த வீடியோவை காவலர்களுக்காக அர்ப்பணிக்கிறோம். எங்களின் நன்றியை இதன் மூலம் தெரிவிக்கிறோம் என்றார்.

Related Stories: