தீபாவளி நெருங்கும் வேளையில் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு

* மீண்டும் சவரன் ₹36 ஆயிரத்தை தாண்டியது

* நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ₹224 அதிகரித்தது. மீண்டும் சவரன் ₹36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், நகை வாங்குவோர் இடையே ஒரு குழப்பமான நிலை இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில் வருகிற 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே நேரத்தில் தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், நிறைய பேர் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த 21ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹35,856க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராமுக்கு ₹5 அதிகரித்து ஒரு கிராம் ₹4,487க்கும், சவரனுக்கு ₹40 அதிகரித்து ஒரு சவரன் ₹35,896க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ₹28 அதிகரித்து ஒரு கிராம் ₹4,515க்கும், சவரனுக்கு ₹224 அதிகரித்து ஒரு சவரன் ₹36,120க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் ₹264 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ₹36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய (சனிக்கிழமை) விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் என்பது தெரிய வரும். தீபாவளி நெருங்கி வருவதால் இன்னும் நகை விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: