வரலாறு காணாத வகையில் தொடர்ந்து ஏற்றம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100ஐ தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: வரலாறு காணாத வகையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100ஐ தாண்டியது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. இதையடுத்து தமிழக அரசின் அறிவிப்பால் பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன்  காரணமாக, ரூ.102க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் வந்தது. இது பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் டீசல் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை தினசரி என்ற அடிப்படையில் உயர்ந்து கொண்டே போனது. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே சுமார் 20 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.54, டீசல் ரூ.5.47 அளவுக்கு அதிகரித்தது. நேற்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. அதாவது, பெட்ரோல் விலை 30 காசுகளும், டீசல் விலை 33 காசுகளும் உயர்ந்தது. இதையடுத்து சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92லிருந்து ரூ.104.22க்கு விற்கப்பட்டது. வருகிறது. அதே நேரத்தில் டீசல் விலை ரூ.99.92ல் இருந்து ரூ.100.25 ஆகவும் உயர்ந்தது. மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் டீசல் விலை சென்சுரி அடித்தது. இதே போல பல மாவட்டங்களில் ஏற்கனவே டீசல் விலை 100ஐ தாண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை ஏற்றத்தால் ஆட்டோ, கார், லாரி போன்ற வாகனங்களின் வாடகை கட்டணங்கள் உயரும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த வாகனங்களில் மளிகை, காய்கறி, ஜவுளி, இரும்பு, சிமெண்ட் ஆகியவற்றை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான வாடகை கட்டணம் அதிகமாகி விலைவாசி மேலும் உயரும். அதுமட்டுமல்லாமல் அலுவலகம் வேலைக்கு செல்பவர்கள் விலை உயர்வால் பெட்ரோலுக்கு என்று கூடுதலாக பணம் ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: