6-வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பஸ்சில் ஏறி பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் 6-வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினையொட்டி, கண்ணகி நகர் மற்றும் எழில் நகரில் கோவிட் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பேருந்தில் ஏறி  மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார். தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, இதுவரை ஐந்து தீவிர கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 5 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 51  நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று 6-வது முறையாக தீவிர கோவிட் தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை, ஓக்கியம் துரைப்பாக்கம், எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணகி நகரில் உள்ள அரசு இ-சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் பார்வையிட்டு, மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது கண்ணகி நகரில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் ஆய்வின்போது, நின்று கொண்டிருந்த எம்-19 பி தி.நகர்- கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் ஏறி, அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் உரையாடினார்.    

இந்நிகழ்ச்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற  உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தலைமை செயலாளர் வெ.  இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி  ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

முதல்வரை பார்த்து பயணிகள் உற்சாகம் கண்ணகி நகர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த, பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஏறி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பயணிகள் முதல்வரை பார்த்ததும் உற்சாகம் அடைந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். முதல்வரும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து பயணிகளிடம் சகஜமாக பேசினார். அப்போது மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு அனைவரும், இந்த திட்டத்தை அறிவித்ததற்கு நன்றி கூறினர். அப்போது, முதல்வரின் அருகில் நின்று கொண்டு இருந்த பெண் பயணி ஒருவர் உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டதும், உடனே முதல்வர் அந்த பயணியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

எ ம்-19 பி தி.நகர்- கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் ஏறி, அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் உரையாடினார். 

Related Stories: