பெரும் வெள்ளம் புரட்டிப்போட்ட போதிலும் பாடம் படிக்காத கேரளா: வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு தர மறுப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே மிக அதிகமாக மழை பொழியும் முதல் 10 மாநிலங்களில் கேரளாவும் உள்ளது. ஆனால், இங்கு கிடைக்கும் மழை நீரில் 70 சதவீதமும் யாருக்கும் பயனில்லாமல் வீணாக கடலில்தான் கலக்கிறது. கடவுளின் சொந்த தேசம் என்று கேரளா அழைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு, மும்மாரி மழை, மனதுக்கு இதமான காலநிலை. இந்த காரணங்களால் தான் கேரளாவுக்கு இந்தப் பெயர் கிடைத்தது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவ மழைகள் மூலமும் கேரளாவுக்கு மிக அதிகமாக மழை கிடைக்கிறது.

வருடத்தில் 6 மாதங்களும், சில வருடங்களில் 7 மாதங்கள் கூட கேரளாவில் மழை பொழியும். வருடந்தோறும் தென்மேற்கு பருவமழை மிகச்சரியாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். பின்னர் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் நவம்பர் இறுதி வரை பெய்யும். சில வருடங்களில் டிசம்பரிலும் மழைப் பொழிவு இருக்கும். இப்படி வருடத்தில் 7 மாதங்கள் மழை பெய்தும்  கேரளாவுக்கு அதிகமாக எந்தப் பலனும் கிடைப்பதில்லை. கேரளாவில் வருடத்திற்கு சராசரியாக 3,107 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. சில வருடங்களில் இதைவிட அதிகமாக மழை பெய்யும். கடந்த 1924ம் ஆண்டு தான் கேரளாவில் மிக அதிகமாக மழை பெய்தது.

 அந்த வருடம் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களிலேயே 3,368 மில்லிமீட்டர் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சராசரியே 1,197 மில்லிமீட்டர் தான் என்பது இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய ஒரு அம்சமாகும். ஆனால், கேரளாவால் இவ்வளவு அதிக மழையை எப்போதும் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கான நிலப்பரப்போ, அணைகளோ, வேறு மாற்று முறைகளோ இங்கு கிடையாது.

வருடத்தில் பாதி நாட்கள் பெய்யும் மழை நீர் முழுவதையும் கேரளாவில் உள்ள அணைகளில் தேக்கி வைக்க முடியாது. இதனால் பெரும்பாலான மழை நீர் எதற்கும் பயனில்லாமல் அரபிக்கடலில் தான் கலக்கிறது. இதனால்தான், உங்களது மாநிலத்தில் வீணாகும் மழை நீரை எங்களுக்குத் தாருங்கள் என்று தமிழ்நாடு பல ஆண்டு காலமாக கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. பம்பை, அச்சன்கோவில் ஆற்றை தமிழகத்தில் ஓடும் வைப்பாறு நதியுடன் இணைத்தால் தென் தமிழ்நாட்டில் உள்ள வறண்ட பூமியான விருதுநகர் மாவட்டம் என்றோ செழிப்படைந்திருக்கும். ஆனால், இந்தக் கோரிக்கையை இதுவரை கேரள அரசு செவிசாய்க்கவில்லை.

 பம்பையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல பகுதிகள் எத்தனையோ முறை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆனாலும், கேரள அரசு அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு உள்பட பல்வேறு பகுதிகள் வருடத்தில் அனைத்து நாட்களும் வெள்ளத்தில் தான் மூழ்கிக் கிடக்கின்றன.  இதனால், இந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். ஆனாலும் பம்பை, அச்சன்கோவில் ஆற்றை எந்தக் காரணம் கொண்டும் வைப்பார் நதியுடன் இணைக்க மாட்டோம் என்று தான் கேரள அரசியல்வாதிகள் இப்போதும் கூறி வருகின்றனர்.

இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் பகுதியில் ஓடும் கல்லாறு நதியை மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக திருப்பி விடவேண்டும் என்று அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், மதுரை மேயராக இருந்த பட்டுராஜன் ஆகியோர் கேரள அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். அதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

அதற்கான மோசமான பலன்களை மூணாறு உள்பட இடுக்கி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர். மழைக்காலம் தொடங்கிவிட்டால் அடிக்கடி இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணையை பெரும்பாலும் திறப்பது கிடையாது. திறந்தால் மின்சாரம் தயாரிப்பு குறைந்துவிடும் என்பது தான் இதற்கு ஒரே காரணமாகும். இந்த அணை கட்டப்பட்டு 48 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இதுவரை  4 முறை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கடந்த 2018ம் ஆண்டு திடீரென அணை திறக்கப்பட்ட போதுதான் எர்ணாகுளம், ஆலுவா உள்பட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது, ஒரேயடியாக 2 லட்சம் கன அடி தண்ணீர் அணையிலிருந்து திறக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளையும், சொத்துக்களையும் இழந்தனர்.

அந்த ஆண்டு தான் கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும்  ஏற்பட்டது. 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி  நிலங்கள் சேதமடைந்தன. இந்தப் பெரும் சேதத்திலிருந்து இன்னும் கேரளா மீளவில்லை.  கேரளாவில் விவசாய நிலங்கள் மிகவும் குறைவுதான். நெல், கரும்பு, கோதுமை போன்ற பயிர்கள் மிகவும் குறைவாகவே பயிரிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் ரப்பர், ஏலம், மிளகு, தேயிலை,  காபி போன்ற பணப்பயிர்கள் தான் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இந்தப் பயிர்களுக்கு அதிகம் தண்ணீர்  தேவை கிடையாது. இதனால், பெரும்பாலும் நீர் மின்சார தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மழைநீர் வீணாக அரபிக்கடலில் கலந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் பெரும்பாலும் நகர்ப் பகுதிகளில் மட்டுமே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலும் கிணற்றுத் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.

இதனால், அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுவதும் கேரளாவில் குறைவுதான். மழைநீரால் அதிகமாக எந்த பலனும் இல்லாத நிலையிலும், வருடம் தோறும் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகின்ற போதிலும் குடிநீருக்காகவும், விவசாயத் தேவைக்காகவும் தண்ணீர் கேட்டு கெஞ்சும் தமிழகத்திற்கு கேரளா தொடர்ந்து கைவிரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையிலும் கூட கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கும், உயிர்ச் சேதமும், பொருள் இழப்பும் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ₹ 250 கோடிக்கு மேல் நிலங்கள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் எந்தக் காரணம் கொண்டும் கடலில் வீணாகும் தண்ணீரைக் கூட தமிழகத்துக்கு தர மாட்டோம் என கேரளா தொடர்ந்து முரண்டு பிடிப்பது ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

மின்வாரியம் கட்டுப்பாட்டில் 51 அணைகள்

கேரளாவில் மொத்தமுள்ள  81 அணைகளில் 51 அணைகளும் கேரள மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.  இந்த அணைகள் முழுக்க முழுக்க நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக  மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மொத்த அணைகள் 81 கேரளாவில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக  சிறிதும், பெரிதுமாக 81 அணைகள் உள்ளன. இதில் இடுக்கியில் உள்ள செறுதோணி அணை  தான் மிகப் பெரியதாகும். இதன் மொத்த உயரம் 453 அடியாகும். இது ஆசியாவிலேயே  மிகப்பெரிய ஆர்ச் வடிவிலான அணை  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை  முழுக்க முழுக்க நீர் மின்சாரம் தயாரிப்பதற்காகவே கட்டப்பட்டதாகும். 1973ம்  ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையிலிருந்து 1976 முதல் மின்சாரம்  தயாரிக்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு பல ஆயிரம் கோடிக்கு இந்த அணை மூலம்  கேரளா மின்சாரம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

Related Stories: