கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து 7 இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 7 நிறுவனங்களுடன் தடுப்பூசி உற்பத்தி குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் 101.30 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 93 கோடி கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். 31 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. விரைவில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 7 நிறுவனங்களுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், சீரம், பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டீஸ் லெபாரடரீஸ், ஜைடஸ் கேடில்லா, பயோலாஜிக்கல் இ, ஜென்னோவா பயோபார்மா மற்றும் பனாசியா பயோடெக் ஆகிய நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியாவும் கூட்டத்தில் பங்கேற்றார். தற்போதைய நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் வோக்சின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மற்ற நிறுவனங்களுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டாலும், அவற்றின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: