2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை சீரமைக்க உயர்மட்ட குழு

சென்னை: கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை சீரமைக்க உயர்மட்டக்குழு விரைவில் அமைக்கப்பட இருப்பதாக பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு ₹8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதற்கே பதிவுத்துறை பெரும் சிரமத்தை சந்தித்தது. கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பில் 33 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்பிறகு அதிகளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டாலும் ₹11 ஆயிரம் கோடி தான் வருவாய் எட்டுகிறது.  இந்நிலையில் வழிகாட்டி மதிப்பில் குளறுபடிகளை சரி செய்தால் மட்டுமே கூடுதல் வருவாயை எட்ட முடியும். எனவே, இதுதொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பேரில் பெருமளவு உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பை சீரமைக்கும் வகையிலும், குளறுபடிகளை சரி செய்யும் வகையிலும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் சிறப்பு உயர்மட்டக்குழு அமைக்க முடிவு செய்யப்படுகிறது.

இந்த குழு அமைக்க கோரி தமிழக அரசுக்கு பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் விரைவில் உயர்மட்டக்குழு அமைக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உயர்மட்டக்குழு மூலம் வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகள் சரி செய்வது தொடர்பாக ஆராயப்படுகிறது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் வழிகாட்டி மதிப்பில் திருத்தம் கொண்டு வரப்படும். இந்த குழு வருவாய் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படாமல் பொதுமக்கள் நலன் கருதியும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு அதன் நடவடிக்கை இருக்கும். இக்குழு அறிக்கை தயார் செய்ய 6 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: