மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை தற்போது திறக்கும் முடிவு இல்லை எனவும், பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்தநிலையில், கடந்த 14ம் தேதி கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதில் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம், காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவித்தது.

இந்தநிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டாது என அரசு அறிவித்தது. அதன்படி, மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை தற்போது திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: