தமிழ்நாட்டில் ரூ.1,789 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ₹ 1,789.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சென்னை ஓட்டேரி கொசப்பேட்டையில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆதிமொட்டையம்மன் கோயில், குளம் ஆகிய இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியது:  400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட ஊழியர்களை, மற்ற துறை ஊழியர்கள் கட்டுப்படுத்த அனுமதி இல்லை.  தற்போது கோயிலுக்கு உள்ளே மட்டும் திருதேர் உலா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80% அளவிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற  எண்ணிக்கையை அடைந்த பின் தேர்த்திருவிழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

  குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது பஞ்சாயத்து அரசு இல்லை. திருக்கோயில்களை வைத்து திமுக இந்துகளுக்கு, ஆன்மிகத்திற்கு எதிரான இயக்கம் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால், ஸ்டாலின் முதல்வரான பின்பு அதனை தகர்த்து உள்ளார் என்றும், திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை மக்கள் உணர்ந்ததால்தான் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றியை திமுக பெற்றுள்ளதாகவும், இனிவரும் தேர்தல்களிலும் இந்த வெற்றி தொடரும்.  சிலை கடத்தலை தடுக்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  திமுக ஆட்சி ஓர் ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக எத்தனை சிலைகள் இதுவரை கடத்தப்பட்டுள்ளது, எத்தனை மீட்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படும்.

இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான ஆகிரமிப்பு செய்யப்பட்ட 342.38 ஏக்கர்  நிலங்களும், 1789.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். பூத கண்ணாடி வைத்து எந்த தவறும் நடைபெறாத வகையில், பணிகள் செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின்போது அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிபிரியா, செயல் அலுவலர் பாஸ்கரன், அறங்காவலர் குழு தலைவர் கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: