×

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேநேரம், பண்டிகை காலத்தை முன்னிட்டு நேற்று முதல் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நவம்பர் 1 முதல் 1லிருந்து 8ம் வகுப்பு வரை பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்படலாம். தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி, பஸ்களில் 100 சதவீதம் பயணிகள் அமர்ந்து செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.  

தமிழ்நாட்டில், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 31ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகை காலங்களில், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று பிற்பகல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

* பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.
* அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.  
* அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும்.
* திரையரங்குகள் 100 சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
* கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
*  ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.
* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், எஸ்ஐஆர்டி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் 100 சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* தேவையான எண்ணிக்கையிலான  பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
* முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க உதவிட வேண்டும்.

பொதுமக்களுக்கு அறிவுரை
பொதுமக்கள் பண்டிகை நாட்களில் மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின்  நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin , Curfew, moreover, relaxations, MK Stalin, notice
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...