கனமழையால் மண்ணரிப்பு; முடங்கன்விளை சாலை துண்டிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட முடங்கன்விளை பகுதி உள்ளது. விவசாய விளைநிலங்கள் நிறைந்த இப்பகுதியில் ஒரு சுடுகாடும் உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல  பழையாற்றின் கரையோரமாக சாலை வசதி உள்ளது. இதன் வழியாக விவசாயம் சார்ந்த பொருட்களையும், சுடுகாட்டுக்கு சடலங்களையும் எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் ஊராட்சி சார்பில் காங்கிரீட் போடப்பட்டது. இதனால் சாலை பொதுமக்களின் போக்குவரத்து மிகவும் எளிதானது. இந்த நிலையில் குமரியில் வெளுத்து வாங்கிய மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சாலையின் ஒருபகுதி காங்கிரீட் உடைந்தது. மேலும் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.

பழையாற்றின் கரையில் தடுப்புச்சுவர் இல்லாததே சாலை துண்டிக்க காரணம் என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சாலை துண்டிக்கப்பட்டதால் பொருட்களையோ, சடலங்களையோ கொண்டு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் இன்று ஒருவர் இறந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய சடலத்தை வயலுக்குள் இறங்கி கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழையாற்றின் கரையில் தடுப்புச்சுவர் அமைத்து சாலையை பாதுகாக்க வேண்டும். ேமலும் துண்டிக்கப்பட்ட சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: