எமரால்டு பகுதியில் 50 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை: விரைவில் திறக்க நடவடிக்கை

மஞ்சூர்:  எமரால்டு பகுதியில் ரூ.18 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை விரைவில்  திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர்  அருகே உள்ளது எமரால்டு. இப்பகுதியை சுற்றிலும் நேருநகர், நேருகண்டி, லாரன்ஸ், கோத்தகண்டி, அண்ணாநகர், எம்ஜிஆர் நகர் உள்பட 50க்கும் மேற்பட்ட  கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து  வருகின்றனர். பெரும்பாலும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்த  எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனையோ, ஆரம்ப  சுகாதார நிலையமோ அமைக்கப்படவில்லை.

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும்  பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை பெற தொலை தூரமுள்ள மஞ்சூர் அல்லது ஊட்டி  போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம், கூடுதல்  செலவினம் உள்பட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. மேலும் உரிய நேரத்தில்  அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.  இதையடுத்து சுற்று வட்டரா கிராமங்களின் மையப்பகுதியாக உள்ள எமரால்டில்  மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைதொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஏக்கர்  நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து வட்டம் சாரா மருத்துவமனை  கட்டுவதற்காக ரூ.18 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 3  ஆண்டுக்கு முன் எமரால்டில் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு  தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது மருத்துவமனை பணிகள் நிறைவடையும்  தருவாயில் உள்ளது.  மருத்துவமனை கட்டிடத்திற்கு மின்வார வசதி உள்ளிட்ட ஒரு  சில பணிகளே நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த பணிகளும்  பூர்த்தியடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

இந்த  மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை,  குழந்தைகள் நலம், விபத்து, அவசர சிகிச்சை, கர்ப்பினிகளுக்கான 24 மணிநேர  கவனிப்பு உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த  மருத்துவமனையின் மூலம் எமரால்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 50கும் மேற்பட்ட  கிராமங்கள் மற்றும் மலை கிராம மக்கள் பயன் பெறுவார்கள் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: