சிவகங்கை புறவழிச்சாலை பணி விரைவில் தொடக்கம்

சிவகங்கை: ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை திட்டத்திற்கு திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. மாவட்டத்தலைநகரான சிவகங்கை வழியே மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருப்பத்தூர் சாலை, மானாமதுரை சாலை என முக்கியச்சாலைகள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்பத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை புறவழிச்சாலை போடப்பட்டது.

மற்றொரு புறவழிச்சாலையான திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் தொடங்கப்படவில்லை. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகும். இந்த சாலை காஞ்சிரங்காலில் இருந்து சூரக்குளம், பையூர், ஆயுதப்படை குடியிருப்பு வழியாக வாணியங்குடி வந்தடையும். சுமார் 10.6 கி.மீ நீளமுள்ள இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கிறது.

இச்சாலைக்காக சுமார் 160க்கும் மேற்பட்டோரிடம் 15.26 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் தாமதமான நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், திட்ட அறிவிப்பிற்கு பின்னர் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தனியார் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து இழப்பீடு வழங்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் சாலைபோடும் பணி தொடங்கப்பட்டுவிடும் என்றார்.

Related Stories:

More
>