வெள்ளக்கோவில் அருகே பட்டியில் இடி விழுந்து 35 ஆடுகள் பலி

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே இடி தாக்கியதில் பட்டியில் அடைத்த 35 செம்மறி ஆடுகள் பலியானது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் கொழிஞ்சிக்காட்டுவலசை சேர்ந்தவர் சிவாகணேசமூர்த்தி(56) விவசாயி. கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு பின் தனக்கு சொந்தமான 80 செம்மறி ஆடுகளை தென்னந்தோப்பு பகுதியில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு இடியுடன் மழை பெய்த நிலையில், நேற்று காலை பட்டிக்கு வந்து பார்த்தபோது தென்னை மரத்தில் இடிதாக்கி மரத்தின் அடியில் நின்ற 35 ஆடுகளும் பலியாகி கிடந்தன. இது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். காங்கயம் தாசில்தார் சிவகாமி, நேரில் வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும்.

விவசாயத்தையும், கால்நடைகளையும் மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் தனக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சிவகணேசமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொழிஞ்சிக்காட்டுவலசில் இடி தாக்கியதில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சி, மிக்ஸ்சி, வாசிங் மிசின், லைட் போன்றவைகள் பழுதடைந்துள்ளன.

Related Stories: