சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள ரசாயன கழிவுகளால் கிராம மக்கள் பீதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள மெயின்ரோட்டில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் பால் பண்ணை இயங்கி வருகிறது. இந்த சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு ரசாயன கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இந்த கழிவு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் எல்.என்.புரம் ஏரி எதிரே உள்ள ஒரு பகுதியில் இதே கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. கழிவுகள் கருப்பு மண்ணாகவும், சாயகழிவு போல் உள்ளது. லாரிகளில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். இதனால், இந்த இரு சாலைகள் வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை.  

நள்ளிரவில் கழிவுகள் எங்கிருந்து வருகிறது என இப்பகுதி பொதுமக்களுக்கு தெரியவில்லை. இரவு நேரத்தில் காற்று அதிகளவு வீசுவதால் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஒருசில நபர்களுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர். மழை காலம் என்பதால் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: