தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கான டன் கருங்கல் ஏற்றுமதி: இயற்கை வளங்கள் அழிவதாக ஆர்வலர்கள் வேதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கான டன் கருங்கற்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் தமிழக இயற்கை வளங்கள் வேகமாக அழிந்து வருகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாலத்தீவு, லட்சத்தீவு உள்ளிட்ட தீவு நாடுகளில் குளோபல் வார்மிங் காரணமாக கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சில தீவுகளை சுற்றிலும் கடல் நீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசுகள், இந்த பாதிப்பை தடுக்க தீவுகளை சுற்றிலும் பெரிய அளவில் கருங்கற்களை இறக்கி பாலங்களையும், பாதுகாப்பு அரண்களையும் ஏற்படுத்தி தீவுகள் மூழ்கும் அபாயத்தில் இருந்து பாதுகாத்து வருகிறது.

இதில் மாலத்தீவு அரசு ஒருபடி மேலே சென்று மக்கள் வசிக்க வசதியாக மாலியில் உள்ள செயற்கை தீவுகளை விரிவுப்படுத்தி அங்குள்ள மக்களுக்காக சகல வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.  இதற்காக பல லட்சம் டன்களில் கருங்கற்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இந்த கற்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டு  செல்லப்படுகின்றன. பொதுவாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்தும், பழைய துறைமுகத்தில் இருந்தும் மாலத்தீவு, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு காய்கறி, அரிசி, பருப்பு முதல் கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட், செங்கல், மணல் மற்றும் கருங்கற்கள், கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுதவிர முழுமையாக வளர்ந்த தென்னை மரங்கள், செடிகள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக மாலத்தீவுகளில் நடக்கும் தீவு மற்றும் கட்டுமான பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து பார்ஜர் எனப்படும் இழுவை கப்பல் மூலம் சிறிய மற்றும் பெரிய வகை கருங்கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தோராயமாக மாதம் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் டன் அளவிலான கருங்கற்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொண்டு செல்லப்படுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் 7.2 லட்சம் டன்கள் கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கற்கள் தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து வெட்டி, உடைத்து எடுக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்படுகிறது. பின்னர் பழைய துறைமுகம் வழியாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் கனிமவளங்களில் முக்கியமான கருங்கற்கள், இவ்வாறு தொடர்ச்சியாக அதிகளவு கொண்டு செல்லப்படுவதால் கனிமவளங்கள் அழியும் நிலையில் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இருந்து கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கனரக லாரிகள் மூலம் கேரளாவில் அமைக்கப்பட்டு வரும் தனியார் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருவதால் குமரியில் கனிமவளம் கொள்ளை போவதை தடுக்கக்கோரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான டன் கருங்கற்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: