பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கொலை; உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு பாமகவினர் போராட்டம்

காரைக்கால்: பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கொலை செய்யப்பட்டதற்கு கண்டம் தெரிவித்தும் கொலையாகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் காரைக்காலில் கொட்டும் மழையில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை வாங்க மறுத்து காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு கொட்டும் மழையில் பாமகவினர் மற்றும் தேவமணி ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காரைக்கால் அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி தேவமணி உடலை வாங்க மறுத்தனர்.

இதனிடையே தேவமணி நேற்றிரவு கொலை செய்யப்பட்ட கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவமணி கொலையால் பதற்றம் நிலவுவதால் காரைக்கால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவமணி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று வலியுத்தியுள்ளார்.

பொதுவாழ்வில் இருப்பவர்களை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தேவமணியை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்,உறவினர்  மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: