ஒருவித போதைக்கு அடிமையாகும் அவலம்.! வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்: மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை

பெரம்பூர்: நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். மது, கஞ்சா போதையில் குற்றச்செயல்களில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சீரழியும் இளைஞர்களை நல்வழி பாதைக்கு கொண்டுவருவதற்கு போலீசாரும் சமூகநல ஆர்வலர்களும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போதையில் இருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். சிறப்பு கூட்டங்கள் நடத்தி, போதையில் ஏற்படும் தீமைகள் அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்படி, மெடிக்கல் கடை  உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் மருந்துகள் ஆய்வாளர் கலைச்செல்வி உள்பட கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ‘’மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது. ஒரு மருந்தை தொடர்ந்து ஒருவர் வாங்கினால் அவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளவேண்டும். வலி நிவாரண மருந்துகளை ஒருவர் வாங்கினால் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று மெடிக்கல் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா கூறுகையில், ‘’ மருத்துவரின் சீட்டை வைத்து எத்தனை கடைகளில் வேண்டுமானாலும் மாத்திரைகளை வாங்கலாம்.

இவ்வாறாக வலி நிவாரண மாத்திரைகளை சிலர் ஒவ்வொரு கடையாக சென்று வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் சில மாத்திரைகளை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது அந்த மருந்து சீட்டில் மருந்துக் கடை வைத்திருப்பவர்கள் மாத்திரை வினியோகிக்கப்பட்டது என்று சீல் வைக்க வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து வாங்குபவரின் பெயர் பட்டியலை தயார் செய்து மாதத்துக்கு ஒருமுறை போலீசாரிடம் ஒப்படைக்கவேண்டும். மருந்துக்கடைகளில் போலீசார் சோதனை செய்து குறிப்பிட்ட வலி நிவாரண மருந்துகளை அதிகமாக பயன்படுத்தும் மருந்தகங்களை கண்காணிக்க பரிந்துரை செய்துள்ளோம். இதன் மூலம் இளைஞர்கள், சிறுவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க முடியும்’ என்றார்.

Related Stories:

More
>